சேலம்: நடத்தையில் சந்தேகமடைந்து, மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.சேலம் தாதகாப்பட்டி தாகூர்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (37). பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி ரதிதேவி (27). இவர்களுக்கு சுபா (11) என்ற மகளும், தர் (2) என்ற மகனும் உள்ளனர். ரதிதேவி, அதே பகுதியில் உள்ள எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் துணி மடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். அதேநேரத்தில் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தார். இதனால் மனைவியின் நடத்தையில் கண்ணனுக்கு சந்தேகம் எழுந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், ரதிதேவி அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் சமாதானம் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று கண்ணன், மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தனியாக பேச வேண்டும் என கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
கணவர் அழைப்பை நம்பிய ரதிதேவி, அவருடன் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கடும் கோபமடைந்த கண்ணன், தயாராக வைத்திருந்த கத்தியால் மனைவியின் நெஞ்சிலும் வயிற்றிலும் சரமாரி குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அவர் ரத்தவெள்ளத்தில் இறந்துபோனார். இதற்கிடையில் மனைவியை குத்தி கொன்ற கண்ணன், மாடி வீட்டிலிருந்து இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அவரது டூவீலர் ஸ்டார்ட் ஆகவில்லை. பின்னர் அங்கிருந்து ஓடினார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீலநாயக்கன்பட்டியில் இருந்த கண்ணனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் கண்ணன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:மனைவியை கண்ணன் எப்போதும் சந்தேகத்துடனேயே பார்த்து வந்துள்ளார். யாரிடம் பேசினாலும் சந்தேகப்படுவார். இவரது தொடர் டார்ச்சர் தாங்க முடியாத ரதிதேவி, பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றும் அடிக்கடி மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இந்நிலையில் நேற்று தனியாக பேச வேண்டும் என மனைவியிடம் கெஞ்சியுள்ளார். இதையடுத்து ரதிதேவி கணவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இனிமேல் உன் மீது சந்தேகப்பட மாட்டேன், திருந்தி விட்டேன் என கூறியுள்ளார். இவ்வாறு வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மனைவியின் காலில் விழுந்து அழுதுள்ளார். நீ எப்போதும் இப்படித்தான் நடிப்பாய், உன்னுடன் இனிமேல் சேர்ந்து வாழவே மாட்டேன் என ரதிதேவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், கத்தியால் சரமாரி குத்திக்கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.