Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்காதலனுடன் உல்லாசத்தை நேரில் பார்த்த கணவரின் பாட்டியை கொன்ற இளம்பெண்

கோவை: கோவை அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்டதால் மூதாட்டியை கொன்று நாடகமாடியதுடன் காதல் கணவரை கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட மூதாட்டி உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியை சேர்ந்தவர் லோகேந்திரன் (38). பைனான்சியர். இவரது மனைவி ஜாய் மெட்டில்டா (27). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்விக் என்ற 6 வயது மகன் உள்ளார். லோகேந்திரனின் தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் தனது தாய் வழி பாட்டி மயிலாத்தாள் (60) என்பவருடன் கஞ்சப்பள்ளி பகுதியில் லோகேந்திரன் வசித்து வருகிறார். ஜாய் மெட்டில்டா அன்னூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் கிளைகள் கர்நாடகாவில் உள்ளது.

அதில் ஒரு கிளை அலுவலகத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ் (25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை அப்ரூவல் செய்யும் பணி தொடர்பாக 2 பேரும் அடிக்கடி லேப்டாப் மற்றும் செல்போனில் வீடியோ கால் பேசி வந்துள்ளனர். இதனால் நாகேஷ்க்கும், ஜாய் மெட்டில்டாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் 11.10.2024 அன்று அன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து சந்தித்து பேசி உள்ளனர். தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை மீண்டும் அதே லாட்ஜில் சந்தித்து பார்த்து பேசியுள்ளார். இதற்காக அன்று காலையிலேயே ஜாய் மெட்டில்டா வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். அலுவலக வேலை இருப்பதாக அவர் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அப்போது வீட்டில் மகனின் பள்ளி நோட்டு ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. மகனும் தாயின் ஸ்கூட்டரில்தான் நோட்டு இருப்பதாக தந்தையிடம் கூறினான். இதையடுத்து ஜாய் மெட்டில்டாவை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் ேலாகேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஜாய் மெட்டில்டாவுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று அவர் பயந்து அன்னூரில் பல இடங்களில் தேடினார். அப்போது லாட்ஜில் இருந்து ஜாய் மெட்டில்டா வெளியே வருவதை லோகேந்திரன் பார்த்தார். விசாரித்தபோது நாகேஷுடன் இருந்துவிட்டு வருவதாக ஜாய் மெட்டில்டா கூறியிருக்கிறார். இதையடுத்து லோகேந்திரன் லாட்ஜ் அறைக்கு சென்று நாகேஷை கண்டித்ததாக தெரிகிறது. மேலும் இது குறித்து நிதி நிறுவனத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் ஜாய் மெட்டில்டாவும், நாகேஷும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி லோகேந்திரன் வெளியூருக்கு சென்றிருந்தார். இதை அறிந்த நாகேஷ் கர்நாடகாவில் இருந்து காரில் அன்னூருக்கு வந்தார். ஜாய் மெட்டில்டா வீட்டுக்கு அருகே காரை நிறுத்திவிட்டு ஜாய் மெட்டில்டாவை சந்திக்க சென்றார். அங்கு ஜாய் மெட்டில்டாவும், நாகேஷூம் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை வீட்டில் இருந்த லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்துவிட்டார். இது யார்? என கேட்டு கண்டித்துள்ளார். இருவரையும் திட்டிய அவர் கூச்சலிட்டார். உறவினர்களுக்கு போன் செய்யவும் முயன்றார். இதனால் கோபமடைந்த ஜாய் மெட்டில்டா, நாகேஷ் ஆகிய 2 பேரும் தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு திணறடித்து மயிலாத்தாளை கொன்றனர். பின்னர் மயிலாத்தாள் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக ஜாய் மெட்டில்டா நாடகமாடியுள்ளார். அதை தொடர்ந்து மயிலாத்தாள் உடல் புதைக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பின்னரும், ஜாய் மெட்டில்டா, நாகேஷ் ஆகிய இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தனர். ‘‘பாட்டியை கொன்றதுபோல் எனது கணவரையும் கொலை செய்துவிட்டால் அதன்மூலம் வரும் சொத்துக்களை எடுத்துகொண்டு நம் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம்’’ என ஜாய் மெட்டில்டா கூறியதாக தெரிகிறது. இதையடுத்து லோகேந்திரனை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 22ம் தேதி நாகேஷை ஜாய் மெட்டில்டா வரவழைத்தார். 23ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு வீட்டில் லோகேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு அறையிலும், ஜாய் மெட்டில்டா ஒரு அறையிலும் இருந்தனர். ஜாய் மெட்டில்டா கதவை திறந்து வைத்து நாகேஷை உள்ளே வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து லோகேந்திரனின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்றனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக லோகேந்திரன் உயிர் தப்பினார். நாகேஷ் பின்பக்க கதவு வழியாக தப்பி அருகில் இருந்த தோட்டத்து வழியாக கர்நாடகாவுக்கு தப்பி சென்றுவிட்டார். இது குறித்து லோகேந்திரன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜாய் மெட்டில்டாவை பார்க்க மீண்டும் நாகேஷ் கர்நாடகாவில் இருந்து கஞ்சப்பள்ளி பிரிவு பகுதிக்கு காரில் வந்தார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்தனர். தொடர்ந்து ஜாய் மெட்டில்டா, நாகேஷ் ஆகிய 2 பேரையும் அன்னூர் போலீசார் கைது செய்தனர். நாகேஷின் சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மயிலாத்தாளை ஜாய் மெட்டில்டாவும், நாகேஷும் சேர்ந்து கொலை செய்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளதால் அது பற்றி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஜாய் மெட்டில்டா, நாகேஷ் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மயிலாத்தாளின் உடலை தோண்டி எடுக்கவும், ஜாய் மெட்டில்டா, நாகேஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.