Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தனிமையில் சந்திக்க இளம்பெண் மூலம் அழைப்பு; கன் பாயிண்டில் அதிமுக நிர்வாகியை கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை: தேரி மணலில் பாதியளவு புதைத்து ரூ.50 லட்சம் கேட்ட மர்ம கும்பல்

உடன்குடி: இளம்பெண் மூலம் ஆசை வார்த்தை காட்டி, உடன்குடி அதிமுக நிர்வாகியை காரில் கடத்தி துப்பாக்கி முனையில் பணம் கேட்டு கொடுமை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் முக்கிய திருவிழாக்கள், நிகழ்ச்சிகளின் போது அதிமுக சார்பில் பெரிய அளவில் பேனர்கள் வைப்பார். அதில் அவரது படத்தை ஒரு ஓரத்தில் பெரிய அளவில் வைத்திருப்பார்.

அதனை பார்த்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் பெரியளவு கடன் வாங்கித் தருவதாக அவரை அணுகியுள்ளார். ஆரம்பத்தில் இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்த அவர், தொடர்ந்து அவர் பேசியதையடுத்து பேச்சில் மயங்கினார். தொடர்ந்து இளம்பெண்ணும், அதிமுக பிரமுகரும் செல்போனில் பேசி வந்த நிலையில் இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இளம்பெண் அவரை தூத்துக்குடி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் பைக்கில் புறப்பட்டார். திருச்செந்தூர் பகுதியில் பைக் சென்றபோது சொகுசு காரில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து இளம்பெண் கூறிய இடத்திற்கு வரும்படி காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர். தொடர்ந்து அவரது கண், கால், கைகளை கட்டி சிறிது தூரத்திற்குப்பின் தேரிப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை தாக்கி துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி தேரி மணலில் தலை மட்டும் தெரியும் அளவிற்கு மணலில் புதைத்து வைத்து தாக்கியுள்ளனர். மேலும் அவரை நிர்வாண நிலையில் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர். நீண்ட நேரம் அவரைத்தாக்கி ரூ.50 லட்சம் பணம் கொடு, இல்லையெனில் இங்கேயே உன்னை சுட்டுக்கொல்வோம். நிர்வாண போட்டோக்களை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் பதறிப்போன அவர் நண்பர்கள், தொழில் பழக்க வழக்கத்தில் உள்ளவர்களிடம் ரூ.50 லட்சம் அவசரமாக வேண்டும் என கேட்டுள்ளார். இவரது பதற்றத்தை நண்பர்கள் கிண்டலாக புரிந்துகொண்டு, ``உனக்கு எதுக்கு இப்போ ரூ.50 லட்சம் தேவை? காமெடி பண்ணாதே’’ எனக்கூறியுள்ளனர். நீண்ட நேரமாக அவர் ஒவ்வொருவருக்காக போனில் தொடர்பு கொண்டும் பணம் ஏதும் கிடைக்காததால், அவரைக்கடத்திய கும்பல் அவரை விடுவித்து விட்டு, செல்போன் உள்ளிட்ட கிடைத்ததை மட்டும் பறித்துக்கொண்டு சென்றனர்.

இதையடுத்து அங்கிருந்து ஊர் திரும்பிய அவர், அவமானத்திற்கு பயந்து போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை. இந்நிலையில் அதிமுக நிர்வாகி நண்பர் ஒருவரிடம், துப்பாக்கி முனையில் தான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பேசிய ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் போலீசார் அதிமுக பிரமுகரிடம், துப்பாக்கிமுனையில் கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.