Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளம்பெண்ணை கொன்று நிர்வாணமாக 3 அடி குழியில் உட்கார்ந்தபடி புதைப்பு: கோபி அருகே பயங்கரம்

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டி செவியூரை சேர்ந்தவர் மோகன் (27). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை, சோளம் பயிர் செய்து உள்ளார். இவரது தோட்டத்தில் காளான் இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் காளான் சேகரிக்கவும், கால்நடை தீவனங்களை சேகரிக்கவும் வருவது வழக்கம். நேற்று காலை இதேபோன்று செவியூர் அருகே உள்ள கும்மிபனையை சேர்ந்த முருகேசன் என்பவர், மோகனின் வாழைத்தோப்பிற்கு வந்த போது, வயல் வரப்பில் ரத்தக்கறையுடன் சிறிய கத்தி கிடந்தது.

அங்கு ரத்தம் சிந்தி இருந்த நிலையில், அருகில் புதிதாக குழி தோண்டி மூடப்பட்ட அடையாளமும் இருந்ததை கண்டு உடனடியாக தோட்ட உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து அங்கு வந்த சிறுவலூர் போலீசார், நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன், பெருந்துறை மருத்துவர் நந்தகுமார் முன்னிலையில் குழியை தோண்டினர். சுமார் 3 அடி ஆழத்தில் அமர்ந்த நிலையில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பூரில் இருந்து மோப்பநாய் ராஜா வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அங்கு இருந்து சிறிது தூரத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு ஓடியது. பின்னர் கோபி- திருப்பூர் சாலை வரை சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு சுமார் 30 வயது இருப்பதும், தலையில் கல்லால் தாக்கியும், சிறிய கத்தியால் கழுத்தில் சரமாரி குத்தியும் கொலை செய்து, பின்னர் புதைத்து இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது தெரியவந்தால் மட்டுமே கொலையாளியை கண்டறிய முடியும் என்பதால், கொலை நடந்த நேரத்தில் அந்த பகுதியில் கிடைத்த செல்போன் சிக்னல், வாகனங்களின் பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.