Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளம்பெண்கள், நடிகைகள் செக்ஸ் புகார்; ஆபாச ஆடியோ லீக்; நடிகர் அஜ்மல் சிக்குகிறார்

சென்னை: நடிகர் அஜ்மல் அமீருக்கு எதிரான பாலியல் பேச்சு சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் ‘கோட்’ படத்திலும் அஜ்மல் நடித்திருந்தார்.

இவரைப் பற்றிய ஆடியோ பதிவுகளும், வீடியோ அழைப்புக் காட்சிகளும் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ‘என்டே கேசட்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜ்மல் அமீரின் வீடியோ அழைப்புக் காட்சிகளும், தொலைபேசி உரையாடலின் பதிவுகளும் வெளியாகியுள்ளன. இந்த உரையாடல்கள் நடிகர் அஜ்மல் பாலியல் ரீதியாகப் பேசியதாகக் கூறப்படுகின்றன. ஒரு பெண், அஜ்மல் அமீரிடம் அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்கிறார், அதற்கு அஜ்மல் ‘‘அதையெல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?’’ என்று எதிர்வினையாற்றுகிறார். மேலும், ‘‘தங்குவதற்கான இட வசதியை ஏற்படுத்தித் தருகிறேன்.

நீ என்னுடன் வா’’ என்றும் அவர் கூறுகிறார். தொடர்ந்து இன்னொரு பெண்ணுடன் பேசும்போது, அவரது உடல் அமைப்பு பற்றியும் அவர் அணியும் ஆடை பற்றியும் ஆபாசமாக அஜ்மல் பேசுகிறார். இளம் நடிகை ஒருவரை படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறும் அஜ்மல், அவரிடம் அந்தரங்க அனுபவம் பற்றி கேட்கிறார். மேலும் அவரது அழகை ஆபாச வார்த்தைகளுடன் வர்ணிக்கும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அஜ்மல் அமீர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்களும், மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, அஜ்மல் தனது சமூக வலைத்தளப் பக்கங்களின் கமெண்ட் செக்‌ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார். சில ஆடியோக்களில் அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ததாகத் தெரியவில்லை என்றும், இது இரு தரப்பினரின் சம்மதத்துடன் நடந்த உரையாடல் என்றும் பலரும் கருதுகின்றனர். வீடியோ அழைப்பின்போது அந்தப் பெண் சிரிப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அஜ்மல் அமீரை குறை கூறுவதற்கு முன் உண்மை நிலையை முழுமையாக அறிய வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. பரஸ்பர நம்பிக்கையுடன் நடந்த ஒரு தனிப்பட்ட உரையாடலை, ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது போல் தெரிகிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த பதிவுகளை வெளியிட்டவர் ‘என்டே கேசட்’ என்ற பக்கத்தை நடத்தும் அப்துல் ஹக்கீம் என்பவர் ஆவார். அதே சமயம், பல இளம்பெண்கள் அஜ்மல் மீது புகார் கூறும் வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன. அஜ்மல் மீது ஆபாச புகார் தரப்படுவது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்பும் நடிகை நர்வினி டெரி ரவிசங்கரும் அவர் மீது செக்ஸ் புகார் கூறியிருக்கிறார். ‘சினம்’ ,‘உயிர் வரை இனித்தாய்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நர்வினி டெரி ரவிசங்கர்.

அவர் முன்பு கூறியது:

ஒருமுறை என் நண்பருடன் பிரபல மாலுக்கு நான் சென்றிருந்த போது, அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன். அவர் தனது அடுத்த படத்திற்காக ஹீரோயினை தேடிக்கொண்டு இருப்பதாகவும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஆடிஷனுக்கு வாருங்கள் என்று கூறினார். நானும் மறுநாள் ஆடிஷனுக்காக அவரது அலுவலகத்துக்கு சென்றேன்.

அங்கு அஜ்மல் என்னிடம் அத்துமீறும் விதத்தில் நடந்து கொண்டதோடு... அவருடன் நெருக்கமாக நடனம் ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான் அதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதே போல் என்னை கட்டிப்பிடிக்க முயன்றார். அந்த நேரத்தில் யாரோ ஒருவர் காலிங்பெல்லை அடிக்க, அஜ்மல் கதவை திறந்ததும் நான் தப்பித்தால் போது என அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்போதே சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அன்றிரவு நான் டென்மார்க் சென்றுவிட்டதால் வெளிப்படுத்த முடியாமல் போனது.

இந்த விஷயத்தை சில மாதம் கழித்து, திரைத்துறையை சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அஜ்மலை நேரில் அழைத்து வார்னிங் கொடுத்தார். மேலும் அஜ்மல் மீது போலீசில் நான் புகார் கொடுத்திருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் சினிமாவில், பல நல்ல மனிதர்களை நான் பார்த்துள்ளேன். இது போன்ற ஒரு சிலரால், நல்லவர்கள் பாதிக்கப்பட கூடாது என எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அஜ்மல் அமீருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் நர்வினி டெரி இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்நிலையில் அஜ்மலிடம் இது பற்றி கேட்டபோது, இது ஏஐ தொழில்நுட்பம் மூலம் எனது குரலை பயன்படுத்தி நடந்துள்ள மோசடியாகும். இதில் எந்த உண்மையும் இல்லை என மறுத்துள்ளார்.