Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரக்கோணத்தில் இளம்பெண் தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

*வரதட்சணை கொடுமை என போலீசில் புகார்

அரக்கோணம் : அரக்கோணத்தில் இளம்பெண் தற்கொலைசெய்து கொண்ட நிலையில், வரதட்சணை கொடுமையால் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தண்டலம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(34). இவர், செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிவேதா(30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதிக்கு, திருமணமாகி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுமாம். இதற்கிடையில், நேற்று முன்தினமும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த நிவேதா, வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை திடீரென பூட்டிக் கொண்டுள்ளாராம்.

நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, ஜன்னல் வழியாக பார்த்தபோது நிவேதா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதார். இதுகுறித்து உடனடியாக அரக்கோணம் தாலுகா போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில்,போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிவேதா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அரக்கோணம் தாலுகா போலீசில் நிவேதாவின் அண்ணன் சென்னையை சேர்ந்த அருண்குமார் நேற்று தனது தங்கையின் சாவில் மர்மம் உள்ளது எனவும், மேலும், வரதட்சனை கொடுமையால் தான் எனது தங்கை இறந்துள்ளார், அவரது இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி,இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

இதுகுறித்து தாலுகா இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் நிவேதா இறந்த சம்பவம் தொடர்பாக, அரக்கோணம் ஆர்டிஓ வெங்கடேசன் மற்றும் டிஎஸ்பி ஜாபர் சித்திக் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிவேதிதாவின் உடலை வாங்க மறுத்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனையில் முன்பு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென நேற்று மாலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து,போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால்,அரக்கோணம் அரசு மருத்துவமனை பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.