Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இளம்பெண் அடித்துக்கொலை? காவல்நிலையத்தில் சரணடைந்த கணவரிடம் தீவிர விசாரணை

திருவொற்றியூர்: இளம்பெண் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் அவரது கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (26). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜோதிகா (23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்றிரவு கோபால் போதையில் இருந்தபோது திடீரென அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு கோபால், திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று, ‘’எனது மனைவி ஜோதிகா திடீரென இறந்துவிட்டார்’ என்று தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து உடனடியாக போலீசார் சென்று பார்த்தபோது ஜோதிகா தலையில் காயத்துடன் இறந்துகிடந்தார்.

இதுசம்பந்தமாக கோபாலிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர், ‘’ஜோதிகா வேறொரு நபருடன் பழகிவந்ததால் அவரை கண்டித்து சண்டை போட்டேன். இதன்பின்னர் மது போதையில் தூங்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்து எழுந்தபோது துப்பட்டாவை ஜன்னலில் கட்டி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கிடந்தார்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஜோதிகாவின் நெற்றியில் மட்டும் காயம் உள்ளதால் அவரது கணவன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஜோதிகாவின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

‘’பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் ஜோதிகாவின் சாவுக்கான காரணம் தெரியவரும்’’ என்று திருவொற்றியூர் காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிஸ் தெரிவித்துள்ளார்.