லக்னோ: சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘சில அரசியல் கட்சிகள் ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கிகளாக கருதுகின்றன. குஜராத், ராஜஸ்தான் எல்லையில் மட்டும் ஏன், ஊருடுவல்கள் நடப்பது இல்லை. ஊடுருவல்காரர்களை கண்டுபிடித்து அவர்களை பாஜ அரசு வெளியேற்றும்’’ என்றார். இந்த நிலையில் சோசலிச தலைவர் ராம் மனோகர் லோஹியா நினைவு நாள் நிகழ்ச்சியில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,‘‘பாஜவின் புள்ளி விவரங்கள் போலியானவை.
பாஜவின் புள்ளி விவரங்கள் மக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை. அதை நம்பினால் அனைத்தையும் இழக்க வேண்டி வரும். வெளியேற்றம் குறித்த புள்ளி விவரங்களை வழங்குபவர்களே கேளுங்கள். உபியிலும் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரகாண்டைச் சேர்ந்தவர். அவரை உத்தரகாண்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.