ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2ம் கட்ட சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க, தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் மலர் நடவு செய்வது வழக்கம். இதையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் 2ம் சீசனுக்கு மலர் செடிகள் நடவு பணிகள் நேற்று தொடங்கியது. இதில் பூங்கா ஊழியர்கள் நாற்றுகளை நடவு செய்து பணிகளை தொடங்கினர். முதற்கட்டமாக பிரன்ச், மேரிகோல்டு மற்றும் பால்சம், டேலியா செடிகள் நடவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகைகளை சேர்ந்த நாற்றுகள் நடவு செய்வதற்கு முடிவு செய்துள்ளனர்.
நடப்பாண்டு 2ம் சீசனுக்கு 10,000 மலர் நாற்றுகள் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட மலர் செடி கிரகங்கள் டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட், வில்லியம் உள்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளில் 2ம் சீசனில் பூக்கள் பூத்து குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.