ஏமனில் கொலை குற்றத்துக்காக விதிக்கப்பட்ட கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
புதுடெல்லி: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த செவிலியர் நிமிஷா ப்ரியா கடந்த 2008ம் ஆண்டு ஏமன் நாட்டுக்கு செவிலியர் பணிக்காக சென்றார். இவர் கடந்த 2015ம் ஆண்டு 2015ம் ஆண்டு மீண்டும் ஏமன் சென்ற நிமிஷா, அங்கு தலால் அப்தோ மஹதி என்பவருடன் சேர்ந்து ஒரு மருத்துவமனையை தொடங்கினார். இந்த மருத்துவமனையில் நல்ல வருமானம் வரத்தொடங்கியதும், மஹதி, நிமிஷா இருவரிடையே மோதல் ஏற்பட்டு, அது நீடித்து வந்தது.
இதையடுத்து தலால் அப்தோ மஹதியிடம் இருந்து பாஸ்போர்ட்டை வாங்குதற்காக மஹதிக்கு அதிகளவு மயக்க மருந்தை நிமிஷா செலுத்தியதில் மஹதி உயிரிழந்து விட்டார். பின்னர் 2017ம் ஆண்டு அங்குள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து மஹதியின் உடல் பல்வேறு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நிமிஷா ப்ரியா, கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் ஏமனின் சனா நீதிமன்றம் நிமிஷா ப்ரியாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து செவிலியர் நிமிஷா ப்ரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினரும், ஒன்றிய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், இதுகுறித்த வழக்கு உச்ச நீதுிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட் ரமணி, “இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்காக ஒரு புதிய மத்தியஸ்தர் முன்வந்துள்ளார். கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவித பாதகமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதே இப்போது நல்ல செய்தி” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.