Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடப்பாண்டில் கை கொடுத்த மழையால் இடைப்பருவ மா மகசூல் அதிகரிப்பு

*போதிய விலை கிடைக்காததால் கவலை

போச்சம்பள்ளி : நடப்பாண்டில் கை கொடுத்த மழையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைப்பருவ மா மகசூல் அதிகரித்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் பராமரிப்பு செய்யும் பணியில் மா விவசாயிகள் ஈடுபடுவர்.

தை மாதம், மா மரங்களில் பூக்கள் விடும். தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் சீசன் தொடங்கி ஜூன், ஜூலையில் நிறைவடையும். கடந்த சில ஆண்டுகளாக சீசன் சமயங்களில், பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறார்கள்.

இதனால், சில விவசாயிகள் இடைப்பருவ மா சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடப்பாண்டில் கை கொடுத்த மழையால், இடைப்பருவ மா மகசூல் அதிகரித்துள்ளது. ஆனால், பொதுமக்களிடையே நுகர்வு குறைந்து, வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விலை சரிந்துள்ளது.

இதுகுறித்து மா விவசாயிகள் கூறியதாவது:விளைச்சல் காலங்களில் மா மரங்களில் பூக்கள் பூப்பதை தடுத்து, செப்டம்பரில் மரங்களை பராமரிப்பதன் மூலம் இடைப்பருவ மா அறுவடை நடைபெறும். இடைப்பருவ சாகுபடி பராமரிப்புக்கு, ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. பெங்களூரா, நீலம், பையனப்பள்ளி மற்றும் செந்தூரா உள்ளிட்ட ரகங்கள் விளைவிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இடைபருவ மா விற்பனை எங்களுக்கு கை கொடுக்கும். குறிப்பாக போச்சம்பள்ளி பகுதியில் இருந்து மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கலிருந்து வியாபாரிகள் நேரடியாகவும், இடைத்தரகர்கள் மூலமாகவும் மாங்காயை கொள்முதல் செய்வார்கள். தற்போது, இடைப்பருவ மா அறுவடை தொடங்கியுள்ள நிலையில், தொடர் மழையால் நுகர்வு குறைந்துள்ளது.

வெளிமாநில கொள்முதலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ மாங்காய் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.30க்கு தான் விற்பனையாகிறது.

இதனால், இடைப்பருவ மா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மா மதிப்பு கூட்டுதல் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியுடன் கூடிய ஏற்றுமதி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.