Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்திய முன்னாள் பிரதமர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை; பாக். தீவிரவாதிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்ட யாசின் மாலிக்: நீதிமன்ற பிரமாணப்பத்திரத்தால் பெரும் சர்ச்சை

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம், இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக், இந்திய உளவுத்துறையுடன் ரகசியமாக செயல்படுவதாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் சந்தேகித்தன. இதன் காரணமாக, கடந்த 2013ம் ஆண்டு யாசின் மாலிக்கை படுகொலை செய்ய அந்த அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியதாகவும், இதனை அறிந்த அவர், தனது உயிருக்காக ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினரிடம் உயிர்ப்பிச்சை கேட்டதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இந்த சூழலில், தற்போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தேசிய புலனாய்வு முகமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக யாசின் மாலிக் தரப்பில் தாக்கல் செய்துள்ள 85 பக்க பிரமாணப்பத்திரத்தில், முந்தைய ஒன்றிய அரசுகள் காஷ்மீர் தொடர்பான திரைமறைவு அமைதி பேச்சுவார்த்தைகளுக்காக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரிலேயே கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தை சந்தித்ததாகவும், பாகிஸ்தானில் இருந்து திரும்பியதும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது, அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் உடன் இருந்ததாகவும், தனது முயற்சிகளுக்காக பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு நேரில் நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 1990ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு இந்திய பிரதமர்களுடன் காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் யாசின் மாலிக் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்களான வி.பி.சிங், பி.வி.நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அவர் பட்டியலிட்டுள்ளார். மேலும், கடந்த 2011ம் ஆண்டு டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சுமார் ஐந்து மணிநேரம் நீண்ட சந்திப்பை நடத்தியதாகவும், இரண்டு சங்கராச்சாரியார்கள் ஸ்ரீநகரில் உள்ள தனது இல்லத்திற்கு பலமுறை வந்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அமைதி முயற்சிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக யாசின் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு அரசு ஏற்பாட்டில் நடந்த சந்திப்பை தற்போதைய ஒன்றிய அரசு திரித்து, தன்னை ஒரு தீவிரவாதியாக சித்தரித்து உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். யாசின் மாலிக்கின் இந்த குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளங்களில் வெளியிட்டு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.