வாஷிங்டன்: உலகமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு இணையதளங்கள், செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில், முக்கிய இணையதளங்கள் அல்லது செயலிகள் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறால் செயலிழப்பதும், சிறிது நேரத்தில் கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம்.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5.20 மணி அளவில் ஒரே நேரத்தில் பிரபல சமூக ஊடகமான எக்ஸ், ஏஐ தளமான சாட்ஜிபிடி, டிசைனிங் இணையதளமான கன்வா மற்றும் கூகுள் கிளவுட் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இணையதளங்கள் ஒரே நேரத்தில் முடங்கின. இந்த இணையதளங்களை பயனர்கள் அணுக முடியாததால் பணி நிமித்தமாகவும் பலர் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற இணைய முடக்கத்தை பற்றி பயனர்கள் புகார்களை அளிக்கும் டவுன்டிடெக்டர் இணையதளமும் முடங்கியது.
லீக் ஆப் லெஜண்ட்ஸ், வலோரன்ட் ஆகிய மல்டிகேமிங் தளங்களும் முடங்கின. சிறிது நேரத்தில் எக்ஸ், டவுன்டிடெக்டர் உள்ளிட்ட தளங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. இந்த உலகளாவிய டிஜிட்டல் இணைய தடைக்கு, கிளவுட்பிளேயரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூறப்பட்டது. கிளவுட்பிளேர் என்பது வலைதளங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களுக்கு பல முக்கிய தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் இணைய உள்கட்டமைப்பு நிறுவனமாகும்.
இந்நிறுவனம்தான் லட்சக்கணக்கான இணையதளங்களுக்கு உள்கட்டமைப்பு சேவைகளை வழங்கி வருகிறது. திடீர் முடக்கம் குறித்து கிளவுட்ப்ளேர் வெளியிட்ட அறிக்கையில், ‘கிளவுட்ப்ளேரின் நிலைப்பக்கத்தில் பல பயனர்களை பாதிக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த சிக்கலை தீர்ப்பதற்கான பணிகள் நடக்கின்றன. விரைவில் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிப்பு வழங்கப்படும்’ என்று கூறியது. இந்த உலகளாவிய இணைய நெருக்கடி குறித்து பயனர்கள் பலர் ரெடிட், த்ரெட்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் கிண்டலடிக்கத் தொடங்கினர்.


