வுஹான்: சீனாவின் வுஹான் நகரில் வுஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி ஒன்றில், பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்காவை வீழ்த்தி, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினியை வீழ்த்தி, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கோகோ காஃப், ஜெஸிகா பெகுலா மோதினர்.
முதல் செட்டில் அசத்தலாக ஆடிய காஃப், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட்டில் பெகுலா கடும் சவாலை எழுப்பியதால், சிறிது போராட்டத்துக்கு பின் அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் காஃப் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் மகத்தான வெற்றி பெற்ற காஃப், வுஹான் ஓபன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு வெற்றிக் கோப்பையும், ரூ.5.30 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.