Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் எந்த தவறும் செய்யவில்லை எஸ்ஐடி விசாரணைக்கு மே 31ம் தேதி ஆஜராவேன்: பிரஜ்வல் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

பெங்களூரு: நான் எந்த தவறும் செய்யவில்லை. மே 31ம் தேதி சிறப்பு புலனாய்வு படை விசாரணைக்கு நேரில் ஆஜராவேன். அதன் பிறகு எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன் என்று பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தள எம்பியாக இருப்பவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா.

இவர் தற்போது ஹாசன் தொகுதி மஜத-பாஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் ஏப்.26ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது பிரஜ்வல் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து மாநில அரசு சிறப்பு புலனாய்வு படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் பிரஜ்வல் ஏப்.27ம் தேதி வெளிநாடு சென்றுவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

பிரஜ்வலுக்கு எஸ்ஐடி போலீசார் ப்ளு கார்னர் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் அவர் நாடு திரும்பாததால் அவரது டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய எஸ்ஐடி வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது. முதல்வர் சித்தராமையாவும் பிரஜ்வல் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி இரண்டு முறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தி வந்த நிலையில் மே 23ம் தேதி பிரஜ்வலுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில், வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘ நான் எந்த தவறும் செய்யவில்லை. சிறப்பு புலனாய்வு படை முன்பு மே 31ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீது பொய்யாக புனையப்பட்ட வழக்கில் இருந்து நான் நீதிமன்றம் மூலமாக வெளியே வருவேன்.

எனது தொண்டர்களிடமும், குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ராகுல் காந்தியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் என்னை பற்றி பேசியதை கேட்டு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். கடவுள், மக்களின் ஆசி எனக்கு உள்ளது. இப்பிரச்னைக்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைப்பேன். என் மீது நம்பிக்கை வையுங்கள் என்று பிரஜ்வல் பேசியுள்ளார்.