சென்னை: எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : முதுபெரும் எழுத்தாளர் குறிஞ்சிச்செல்வர் கொ.மா. கோதண்டம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பஞ்சாலைத் தொழிலாளராக தமது வாழ்வைத் தொடங்கிய கோதண்டம், இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி. சிறார்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் பெரும் பங்களிப்பைச் செய்தவர்.
பால சாகித்திய விருது, குடியரசுத் தலைவர் விருது, தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவரது நூல்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டன. கொ.மா.கோதண்டம் மறைவு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், எழுத்தாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.