உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தங்கம் வென்று அசத்திய தமிழக வீரர் ஆனந்த குமார்: 42 கிமீ ஸ்கேட்டிங்கில் சாதனை
பெய்ஜிங்: உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 42 கி.மீ. ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் ஆனந்த குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகரில் உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், 1000 மீட்டர் ஸ்பிரின்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் ஆனந்த குமார்(22) முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த 42 கி.மீ ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டியிலும் அவர் பங்கேற்றார்.
வேகம், விவேகம், அர்ப்பணிப்புடன் அபார திறனை வெளிப்படுத்திய ஆனந்த குமார், முதலிடத்தை பிடித்தார். அதனால் இந்த போட்டிகளில் 2வது தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஸ்கேட்டிங் போட்டிகளில் உலகளவில் 2 தங்கப் பதக்கங்கள் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக நடந்த 500 மீட்டர் ஸ்பிரின்ட் ஸ்கேட்டிங் போட்டியிலும் ஆனந்த குமார் வெண்கலம் வென்றுள்ளார். இதன் மூலம், ஸ்கேட்டிங் போட்டிகளில் தனது வல்லமையை ஆனந்த குமார் உலக அரங்கில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.