அகமதாபாத்: உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் துவக்க போட்டியும், இறுதிப் போட்டியும் அகமதாபாத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டில் நடந்த உலகக் கோப்பை டி20 போட்டிகளின் இறுதியில், இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நடப்பு சாம்பியனாக திகழ்கிறது. இந்நிலையில், அடுத்த உலகக் கோப்பை டி20 போட்டிகள் வரும் 2026 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளை இந்தியாவும், இலங்கையும் நடத்த உள்ளன. துவக்கம் மற்றும் இறுதிப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தவிர, அரை இறுதிப் போட்டிகள், மும்பையின் வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும்.
பாகிஸ்தான் அணி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறும். இந்த இடங்கள் தவிர, டெல்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தத்தில் 10 இடங்களில் இப்போட்டிகள் நடைபெறும். கடந்த ஜூனில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால், பெங்களூரு நகரம், உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. சர்வதேச கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையில் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிகளும், பாக். பங்கேற்கும் போட்டிகளும், இலங்கையில் நடைபெறும்.
