கோவா: கோவாவில் நடைபெறவுள்ள ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்க, இந்தியாவை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் திவ்யா தேஷ்முக்கிற்கு (19), வைல்ட் கார்ட் என்ட்ரியாக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாவில், வரும் அக்.31ம் தேதி முதல் நவ.27ம் தேதி வரை ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு, 2026ல் நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். அதில் வெற்றி பெறுபவர், அடுத்த உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் மோதுவார்.
இந்நிலையில், கோவாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்பதாக இருந்த வீரர்களில் ஒருவர் விலகி உள்ளார். அதனால், அப்போட்டியில் பங்கேற்க, திவ்யா தேஷ்முக்கிற்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, உலக கோப்பை செஸ் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் தலைமையிலான 20 இந்திய வீரர்கள் குழுவில் ஒருவராக, திவ்யா போட்டியிடுவார். திவ்யா, ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.