படுமி: ஜார்ஜியாவின் படுமி நகரில், 3வது ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற்ற இந்திய செஸ் வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். நேற்று முன்தினம் இவர்கள் மோதிய இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று, 2வது ஆட்டம் நடந்தது.
இம்முறையும் இருவர் இடையே போட்டி கடுமையாக இருந்தது. பல சமயம், கொனேரு ஹம்பி காய்களை விரைவில் நகர்த்தியதால் அவருக்கு கூடுதல் நேர அவகாசம் கிடைத்தது. திவ்யா திணறியபோதும், சமாளித்து காய்களை நகர்த்தியபடி இருந்தார். அதனால் போட்டி டிராவை நோக்கி சென்றது. கடைசியில், இருவரும் சம்மதிக்க, ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இன்று நடக்கும் டைபிரேக்கர் ஆட்டங்கள் மூலம் சாம்பியன் யார் என்பது முடிவாகும்.