டெல்லி: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடியும், பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதுபோல், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில முதல்வர்கள், கிரிக்கெட் வாரியங்களும் பரிசுத்தொகை வழங்கி கவுரவித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 25ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ள டாடா சியரா எஸ்யூவி காரை அணியில் இடம்பெற்ற ஒவ்வொருவருக்கும் பரிசாக வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து டாடா நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘லெஜண்ட்ஸ் லெஜண்ட்ஸை சந்திக்கிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியையும், அவர்களின் புகழ்பெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை செயல்திறனையும் கொண்டாடும் வகையில், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தைரியமான, பல்துறை மற்றும் காலத்தால் அழியாத லெஜண்ட் டாடா சியராவை பெருமையுடன் வழங்குகின்றன’ என்று தெரிவித்து உள்ளது.
+
Advertisement
