லண்டன்: 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆட, குரோஷியா அணி தகுதி பெற்றுள்ளது. வரும் 2026ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதும் இருந்து 48 அணிகள் மோதவுள்ளன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இப்போட்டிகளை நடத்துவதால், அவற்றின் அணிகள், உலகக் கோப்பை போட்டிகளில் ஆட நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அவை தவிர மேலும் 45 நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், குரூப் எல்- பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா, ஃபரோ ஐலேண்ட்ஸ் அணிகள் நேற்று நடந்த தகுதிச் சுற்று போட்டியில் ஆடின. போட்டியின் துவக்கத்தில் அமர்க்களமாக ஆடிய ஃபரோ ஐலேண்ட் அணியின் கெஸா டேவிட் துரி முதல் கோலடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆனால், 23வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் சிறப்பாக ஆடி கோலடித்து போட்டியை சமன் படுத்தினார்.
முதல் பாதிக்கு பின், குரோஷியாவின் பீட்டர் முஸா அணியின் 2வது கோலடித்து அசத்தினார். போட்டியின் கடைசி கட்டத்தில் பம்பரமாய் சுழன்றாடிய குரோஷியாவின் நிகோலா விளாசிக் அணியின் 3வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார். அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா, எல் பிரிவு புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்று 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆட தகுதி பெற்றது.


