பாஞ்சிம்: கோவாவில் நடந்து வரும் உலக கோப்பை செஸ் போட்டியில் நேற்று, ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் இயான் நெபோம்னியாட்சியை, இந்திய கிராண்ட் மாஸ்டர் தீப்தயான் கோஷ் அபாரமாக வென்று அதிர்ச்சி அளித்தார். கோவாவின் பாஞ்சிம் நகரில் உலக கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றின் 2வது போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் தீப்தயான் கோஷ் - ரஷ்ய வீரர் இயான் நெபோம்னியாட்சி மோதினர்.
வெள்ளைக் காய்களுடன் ஆடிய இயான், போட்டியின் துவக்கத்தில் சில தவறுகளை செய்தார். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோஷ், போட்டியின் இறுதிக்கட்டம் வரை கடும் அழுத்தம் தந்து கடைசியில் அபார வெற்றி பெற்றார். இயான், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு பின், நிருபர்களிடம் பேசிய கோஷ், ‘என் செஸ் வாழ்நாளில் இது மிகப்பெரும் வெற்றி.
இயானை போட்டியில் வெல்வதை மகத்தான செயலாக கருதுகிறேன்’ என்றார். முன்னதாக, நேற்று நடந்த மற்றொரு போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா, ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் அர்ஸெனிய் நெஸ்டெரோவை வீழ்த்தி, 3வது சுற்றுக்குள் முதல் இந்தியராக நுழைந்தார். அதேசமயம், தமிழகத்தை சேர்ந்த எம்.பிரனேஷ்-ஜெர்மன் வீரர் டிமிட்ரி காலர்ஸ் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
