நாஞ்சிங்: உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் சீனாவின் நாஞ்சிங் நகரில் நடந்து வருகின்றன. மகளிர் காம்பவுண்ட் பிரிவில் துவக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய வீராங்கனையும், ஆசிய விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவருமான ஜோதி சுரேகா (29), காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை அலெக்சிஸ் ரூய்ஸ் உடன் மோதினார். அந்த போட்டியில் 143-140 என்ற புள்ளிக் கணக்கில் சுரேகா வென்றார்.
இருப்பினும், அரை இறுதியில் மெக்சிகோவை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆண்ட்ரியா பெசேராவிடம், 143-145 என்ற புள்ளிக் கணக்கில் சுரேகா தோல்வியை தழுவினார். அதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனை சேர்ந்த உலகின் நம்பர் 2 வீராங்கனை எல்லா கிப்சன் உடன் சுரேகா மோதினார். இப் போட்டியில் அற்புதமாக அம்புகளை எய்த சுரேகா 150-145 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினார்.
அதையடுத்து, உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை அவர் தட்டிச் சென்றார். உலகக் கோப்பை பைனல் போட்டிகளில் சுரேகா ஜோதி இதற்கு முன் இரு முறை பங்கேற்றுள்ளார். 2022ல் ட்லாக்ஸ்கலாவிலும், 2023ல் ஹெர்ஸ்மோசிலோவிலும் நடந்த அந்த போட்டிகளில் துவக்க சுற்றுகளிலேயே, சுரேகா தோல்வியை தழுவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.