லிவர்பூல்: உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் போலந்து வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டனின் லிவர்பூல் நகரில் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, போலந்து வீராங்கனை ஜூலியா ஸ்ஸெரெமெடா உடன் மோதினார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை ஜூலியாவை, ஜாஸ்மின் அதிரடியாக குத்துக்கள் விட்டு திணறடித்தார். கடைசியில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஜாஸ்மின் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதையடுத்து, குத்துச் சண்டை போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் வெல்லும் 9வது இந்திய வீராங்கனையாக, ஜாஸ்மின் லம்போரியா உருவெடுத்தார். இதற்கு முன், மேரி கோம் 6 முறையும், நிஹாத் ஸரீன் 2 முறையும், சரிதா தேவி, ஜென்னி, லேகா, நீது காங்காஸ், லவ்லினா போர்கோஹெயின், ஸ்வீட்டி பூரா ஆகியோர் இந்தியாவுக்காக தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்று நடந்த போட்டியில், 80+ கிலோ எடைப்பிரிவில் மோதிய இந்திய வீராங்கனை நுபுர் ஷெரான் வெள்ளிப் பதக்கமும், 80 கிலோ எடைப் பிரிவு போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா ராணி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.