டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் பதக்க வாய்ப்பை நீரஜ் சோப்ரா இழந்தார். 84.03 மீட்டர் தூரம் அதிகம் வீசிய நிலையில் 8ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெறும் நிலையில் 8ஆம் இடத்தை பிடித்ததால் நீரஜின் பதக்க வாய்ப்பு பறிபோனது. நீரஜ் சோப்ரா பதக்க வாய்ப்பை இழந்த நிலையில் பதக்க வாய்ப்பில் இந்தியாவின் சச்சின் யாதவ் நீடிக்கிறார்.
ஜப்பானின் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் 20 ஆவது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஈட்டியெறிதல் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கு பெறும் 12 வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. ஏ பிரிவில் நடந்த போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இடம் பெற்றிருந்தார். இறுதிப் போட்டியில் மோதுவதற்கான குறைந்தபட்ச தூரமாக, 84.50 மீட்டர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
நீரஜ் சோப்ரா, முதல் முயற்சியிலேயே, 84.85 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து இறுதிக்கு முன்னேறினார். ஏ பிரிவில் நேற்று பங்கேற்ற வீரர்களில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் 87.21 மீட்டர் தூரம் எறிந்தும், போலந்தின் டேவிட் வெக்னர் 85.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
தொடர்ந்து நடந்த பி பிரிவு தகுதிச்சுற்றுப் போட்டியின் முதல் சுற்றில், பாகிஸ்தானை சேர்ந்த, பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம் கலந்து கொண்டார். முதல் முயற்சியில் அவரால் 76.99 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியெறிய முடிந்தது. கென்யாவின் ஜூலியஸ் யேகோ, 85.96 மீட்டர் தூரம் எறிந்து இறுதிக்கு தகுதி பெற்றார். பி பிரிவில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான ரோகித் யாதவ் 77.81 மீட்டர், யாஷ் வீர் சிங் 76.11 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்ததால் தகுதி பெறத் தவறினர்.
தொடர்ந்து நடந்த 2வது முயற்சியின்போது, பாக்.கின் அர்ஷத் நதீம், இன்னும் மோசமாக 74.11 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியெறிந்து அதிர்ச்சி அளித்தார். இம்முறை கிரேனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.53 மீட்டர் தூரமும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் 84.72 மீட்டர் தூரமும் ஈட்டியெறிந்து இறுதிக்கு முன்னேறினர். அதைத் தொடர்ந்து 3வது முயற்சியில் அர்ஷத் நதீம் 85.28 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து இறுதிச் சுற்றுக்கு ஒரு வழியாக முன்னேறினார்.
இன்று நடைபெற்ற போட்டியில் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் பதக்க வாய்ப்பை நீரஜ் சோப்ரா இழந்தார். 84.03 மீட்டர் தூரம் அதிகம் வீசிய நிலையில் 8ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெறும் நிலையில் 8ஆம் இடத்தை பிடித்ததால் நீரஜின் பதக்க வாய்ப்பு பறிபோனது. பாகிஸ்தான் வீரர் நீதமும் இறுதிசுற்றுக்கு செல்லாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.