ஜாக்ரெப்: குரோஷியாவில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 53 கிலோ ஃப்ரிஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்டிம் பங்வால் (21) வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 53 கிலோ எடை ஃப்ரீஸ்டைல் மகளிர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை அன்டிம் பங்வால் பங்கேற்றார்.
சுவீடனை சேர்ந்த, 23 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரென் உடன் பங்வால் மோதினார். அற்புதமாக களமாடிய அவர், 9-1 என்ற புளளிக்கணக்கில் மகத்தான வெற்றி பெற்றார். 53 கிலோ பிரிவில், ஒட்டு மொத்தத்தில், பங்வால் 3ம் இடம் பிடித்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
பங்வால், இதற்கு முன் ஆசிய போட்டிகளில் பங்கேற்று வெண்கலம் வென்றுள்ளார். தவிர, இரண்டு முறை, கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வசப்படுத்தி உள்ளார். மேலும் 2023ல் நடந்த உலக மல்யுத்த போட்டியிலும் பங்வால் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.