லாஸ்வேகாஸ்: துபாயை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்தியரான அனுனய் சூட் (32), தனது பயண அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் உலக அளவில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் 14 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களையும், யூடியூபில் சுமார் 3.84 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டிருந்த இவர், போர்ப்ஸ் இந்தியாவின் ‘சிறந்த 100 டிஜிட்டல் நட்சத்திரங்கள்’ பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக (2022, 2023, 2024) இடம்பிடித்தவர். பொறியியல் பட்டதாரியான இவர், தனது திறமையால் குறுகிய காலத்தில் பெரும் புகழையும், செல்வத்தையும் ஈட்டினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற சொகுசு கார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அனுனய் சூட், திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவரது தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 7 முதல் 10 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது திடீர் மறைவு, அவரது பாலோயர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

