புதுடெல்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நேற்று, ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா அபாரமாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். டெல்லி, ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த ஆடவர் பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் யோகேஷ் கதுனியா பங்கேற்றார். அவர் 42.49 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். பிரேசில் வீரர் கிளாடினி படிஸ்டா, 45.67 மீட்டர் தூரம் வட்டு எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 39.97 மீட்டர் தூரம் வட்டு எறிந்த கிரீஸ் வீரர் கோன்ஸ்டான்டினோஸ் ஸோனிஸுக்கு வெண்கலம் கிடைத்தது.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் யோகேஷுக்கு 3வது முறையாக வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் முறையே பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் நடந்த போட்டிகளிலும் அவர் வட்டு எறிதலில் வெள்ளி வென்றார். தற்போது நடக்கும் போட்டிகளில் இந்தியாவுக்கு, 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.