Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிரம்பின் வெற்றி இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா?.. முதல் கையெழுத்தால் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு

‘அமெரிக்காவே முதலில்’ என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதாக டிரம்ப் தனது பிரசாரத்தில் கூறி உள்ளார். இதனால், பிறப்பின் மூலம் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சலுகையை முடிவுக்கு கொண்டு வருவதே தனது அரசின் முதல் கையெழுத்தாக இருக்கும் என கூறி உள்ளார். அதாவது, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற புலம் பெயர்ந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை தாமாக வழங்கப்படுவது முடிவு கட்டப்படும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெற்ற 10 லட்சம் இந்தியர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுதவிர, டிரம்ப் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை தருவதில் ஆர்வம் கொண்டவர். இது இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும், ஐடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசா கட்டுப்பாடுகளை டிரம்ப் தீவிரமாக்கலாம்.

அதன் எண்ணிக்கையை குறைக்கவும் செய்யலாம் என்பதால் இந்த விஷயங்கள் டிரம்ப் வரவால் இந்தியாவுக்கு பாதகமாக அமையும் என அஞ்சப்படுகிறது. இதுதவிர, டிரம்ப் மற்ற தலைவர்களைக் காட்டிலும் மிகவும் வெளிப்படையாக பேசுபவர். ‘எனக்காக நீ செய்தால், உனக்காக எதையும் செய்வேன்’ என்கிற கொள்கையை கொண்டவர். வரி விதிப்புகளில் மிகவும் கறார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பை கடுமையாக எதிர்ப்பவர். அதனால் இந்தியா வரியை குறைத்தால் அமெரிக்காவும் வரியை தளர்த்திக் கொள்ளும். மேலும், அமெரிக்காவில் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது முழுக்க முழுக்க சீனா பொருட்களுக்கு வைக்கும் குறி மட்டுமே. சீனா பொருட்களுக்கு 60 சதவீதமும் மற்ற நாட்டு பொருட்களுக்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கூறி உள்ளார்.

இது இந்திய ஏற்றுமதி பொருட்களை பெரிய அளவில் பாதிக்காது. அதோடு, சீனாவை நம்பி இருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இதனால் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும் டிரம்ப் மூலம் விரைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பாதுகாப்பு ரீதியாகவும் இந்தியாவுக்கு டிரம்ப் நெருக்கமாகவே உள்ளார். தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா எப்போதும் போல இணைந்து செயல்படுவதையே டிரம்ப் விரும்புவார். அனைத்தையும் விட பிரதமர் மோடியுடன், டிரம்புக்கு நல்ல நட்புறவு இருப்பது இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.