Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு: கனிமொழி எம்பி குழுவிடம் லாத்வியா உறுதி

ரிகா: தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கனிமொழி எம்பி தலைமையிலான குழுவிடம் லாத்வியா உறுதி அளித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்பாடுகள் குறித்து உலக நாடுகளிடையே அம்பலப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 7 குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.

அதன்ஒரு பகுதியாக நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி தலைமையிலான குழுவினர் நேற்று லாத்வியா நாட்டுக்கு சென்றனர். லாத்வியா தலைநகர் ரிகாவை சென்றடைந்த குழுவினரை இந்திய தூதர் நம்ரதா குமார் வரவேற்றார். பின்னர் ரிகாவில் உள்ள தேசிய நூலகத்துக்கு சென்ற கனிமொழி குழுவினர், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், லாத்வியா நாட்டின் பல்வேறு அதிகாரிகளை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்கள் பற்றி எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து லாத்வியாவில் உள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் பதிவில், “தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கோட்பாடு தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது பதிலளிக்கும் உரிமைகள் பற்றி லாத்வியா அதிகாரிகளுடன் இந்திய குழுவினர் பகிர்ந்து கொண்டனர்” என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லாத்வியா வௌியுறவு அமைச்சகம் தன் எக்ஸ் பதிவில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கிய கூட்டாளியாக இந்தியாவுடன் அனைத்து தரப்பு உறவுகளை மேம்படுத்த லாத்வியா ஆர்வமாக உள்ளது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லாத்வியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் தீவிரவாதத்தை அதன் எல்லா வடிவங்களிலும் லாத்வியா எதிர்க்கும்” என தெரிவித்துள்ளது.

* இந்தியாவின் விளக்கத்தை ஏற்று இரங்கல் அறிக்கையை திரும்ப பெற்ற கொலம்பியா

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான 9 பேர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் கொலம்பியா சென்றனர். அங்கு கொலம்பியா கவுன்சில் உறுப்பினர்களிடம் பேசிய சசி தரூர், “அகிம்சை வழியில் அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்திய மகாத்மா காந்தியின் நாட்டை சேர்ந்தவர்கள் நாங்கள். ஆனால் அமைதி என்பது சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். இந்தியா தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

தீவிரவாதத்தை எதிர்கொள்வதையும் இந்தியா சரியாக செய்துள்ளது. பிரச்னைகளை அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா உணர்ந்துள்ளது. ஆனால் நெற்றியில் துப்பாக்கி வைத்திருக்கும்போது அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமும், நம்பிக்கையும் இல்லை. தீவிரவாதத்தை தங்கள் கொள்கையாக வைத்து கொண்டுள்ள பாகிஸ்தான், தங்கள் நாட்டிலுள்ள தீவிரவாத முகாம்களை தாங்களே அழிக்கும்போது அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

அதுவரை அமைதி பேச்சுவார்த்தை பற்றி யோசிக்க முடியாது” என்று தெரிவித்தார். சசி தரூரின் விளக்கத்தை கேட்ட கொலம்பியா வௌியுறவு துணை அமைச்சர் ரோசா யோலண்டோ வில்லாவிசென்சி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வௌியிட்ட இரங்கல் அறிக்கையை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.