சியோல்: வடகொரியாவை குறிவைத்து அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் பாதுகாப்பு கூட்டணி அமைப்பதை ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் நெருக்கமாகி வருகின்றது. ராணுவ மற்றும் பொருளாதார உதவிக்கு ஈடாக ரஷ்யாவுக்கு வடகொரியா வீரர்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கி உக்ரைன் போரில் உதவி வருகின்றது.
வரும் நாட்களில் ரஷ்யா தனது அணு மற்றும் ஏவுகணை திட்டங்களின் தொழில்நுட்பங்களை வடகொரியாவிற்கு மாற்றக்கூடும் என்ற கவலையையும் எழுப்பி உள்ளது. இதனிடையே ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் நேற்று முன்தினம் வடகொரியாவிற்கு சென்றிருந்தார். நேற்று வடகொரியாவின் வெளியுறவு துறை அமைச்சர் சோ சோன் ஹூயை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய லாவ்ரோவ், ‘‘அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வடகொரியாவை சுற்றி ராணுவ கட்டமைப்புக்களை உருவாக்குகின்றன.
வடகொரியா, ரஷ்யா உட்பட யாருக்கு எதிராகவும் இந்த கூட்டணிகளை உருவாக்குவதற்கு, இந்த உறவுகளை பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் எச்சரிக்கிறோம். வடகொரியா பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் அதன் சொந்த விஞ்ஞானிகளின் பணியின் விளைவாகும் வடகொரியாவின் விருப்பங்களை நாங்கள் மதிக்கிறோம். அது அணுசக்தி வளர்ச்சியை தொடர்வதற்கான காரணங்களை நாங்கள் புரிந்து கொள்கிறோம்” என்றார்.