மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள உயர்ரக குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், 4 பேர் பலியாகினர். இவர்களில் ரஷ்ய ஆதரவு படைக்குழுவின் தலைவர் ஆர்மென் சர்கிஸ்யானும் அவரது பாதுகாவலரும் பலியானதை ரஷ்யா உறுதிபடுத்தி உள்ளது. ஆர்மென் சர்கிஸ்யான் உக்ரைன் அரசால் தேடப்படும் நபர். இவர் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான உக்ரைனின் டோனெட்ஸ்க்கில் படைப்பிரிவை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்.
உக்ரைன் சிறைக் கைதிகள் மூலம் அந்நாட்டிற்கு எதிராக நாசவேலைகள் செய்ததாக சர்கிஸ்யான் மீது உக்ரைன் அரசு குற்றம்சாட்டி உள்ளது. குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ள இவரை குறிவைத்தே இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே உக்ரைன் ஆட்சியாளர்கள் உத்தரவின் பேரில் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.