சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை ரசித்த மலேசிய அமைச்சர்: செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்
சென்னை: மலேசியாவின் பேரா மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாடு துறை அமைச்சர் சிவநேசன் சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு நேற்று காலை வந்தார். முன்னதாக, அவருக்கு மல்லை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மல்லை தமிழச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மல்லை சத்யா தலைமையில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலையில், தமிழக கலாச்சாரப்படி பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை மலேசிய நாட்டின் பேரா மாநில அமைச்சர் சிவநேசன் சுற்றி பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தார்.
அப்போது மல்லை தமிழ்ச் சங்க செயலாளர் பாஸ்கரன், விசிக மாவட்ட செயலாளர் கனல் விழி, திருக்கழுக்குன்றம் விசிக ஒன்றிய செயலாளர் அன்பு, விசிக நகர செயலாளர் ஐயப்பன், பிரபல சமூக ஆர்வலர்கள் குங்பூ மாஸ்டர் அசோக், பாபு, சுரேந்தர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.