பாஸ்டன்: ‘கிஸ் கேம்’-ல் நேரலையில் நெருக்கமாக இருந்த தலைமை செயல் அதிகாரி - பெண் பிஆர்ஓ தொடர்பான வீடியோ கார்ப்பரேட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஜில்லெட் மைதானத்தில், புகழ்பெற்ற ‘கோல்ட்பிளே’ இசைக்குழுவின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, நிகழ்ச்சியை கண்காணித்து வந்த ‘கிஸ் கேம்’ கேமரா, கூட்டத்தில் இருந்தவர்களைப் படம்பிடித்து பெரிய திரையில் காட்டியது. அந்த கேமரா, பிரபல கார்ப்பரேட் நிறுவனமான ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி பைரன், அதே நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கிறிஸ்டின் கேபோட் மீது திரும்பியது.
அப்போது இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நெருக்கமாக அணைத்தபடி நின்றுகொண்டிருந்தனர். கேமரா தங்களை நோக்கித் திரும்பியதை உணர்ந்ததும், அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக விலகி, தங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர். இதை மேடையிலிருந்தபடியே கவனித்த கோல்ட்பிளே பாடகர் கிறிஸ் மார்ட்டின், ‘ஓ, இவர்கள் இருவரையும் பாருங்கள்... அவர்கள் கள்ள உறவில் இருக்க வேண்டும் அல்லது மிகவும் வெட்கப்படுகிறார்கள்’ என்று நகைச்சுவையாகக் கூறினார்.
இதைக் கேட்டதும் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலை எழுந்தது. கிறிஸ் மார்ட்டின் கிண்டலடித்த இந்தச் சம்பவம், உடனடியாக சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியது. டிக்டாக், ரெட்டிட், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி, பெரும் விவாதப் பொருளாக மாறியது. பலரும் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியையும், கேலியையும், விமர்சனத்தையும் ஒருசேர வெளிப்படுத்தினர். சிலர், ஆண்டி பைரனின் மனைவிக்கு அனுதாபம் தெரிவித்தும் வருகின்றனர்.