Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்; ஹிஸ்புல்லா அமைப்பில் சேர தயாராகும் போராளி குழுக்கள்

பெய்ரூட்: இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹிஸ்புல்லா படையில் இணைய பல்வேறு போராளி குழுக்கள் தயாராகி வருகின்றன. இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் 8 மாதங்களாக நீடிக்கிறது. இந்த போரில் இதுவரை 37,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டனர். இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் படையினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார். போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சில நாடுகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அதேசமயம் ஹமாஸ் படையினருக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி அமைப்பும், ஈரானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. இந்த ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச கப்பல் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா படையினர் விலகி செல்லவில்லை என்றால் லெபனான் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஈரானில் உள்ள போராளி குழுக்கள் ஹிஸ்புல்லாவில் சேர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த அதிகாரி கூறியதாவது,

“இந்த மோதல் நீடித்து போராக மாறினால் ஈரான், ஈராக், சிரியா, ஏமன் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த போராளி குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹிஸ்புல்லாவுடன் இணைய தயாராக உள்ளனர். ஆனால் எங்கள் குழுவில் ஏற்கனவே 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போராளிகள் உள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பு மனித சக்தியை பயன்படுத்தி மட்டுமே இப்போது போர் செய்து வருகிறது. ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால் கூடுதல் போராளிகள் தேவைப்படுவார்கள். அப்போது எங்களுக்கு உதவ தயாராக உள்ள குழுக்களில் இருந்து போராளிகள் சேர்க்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.