ஹோஷியார்பூர்: ஈரானில் கடத்தப்பட்ட இந்திய இளைஞர்கள் 3 பேர் ஒரு மாதத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூரைச் சேர்ந்த அம்ரித்பால் சிங்(23), ஷாஹீத் பகத் சிங் நகரைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் மற்றும் சங்ரூரைச் சேர்ந்த ஹுஷான்பிரீத் சிங் ஆகிய இளைஞர்களிடம், ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பயண நிறுவனத்தால் அழைத்து செல்லப்பட்டனர். கடந்த மே 1ம் தேதி டெல்லியில் இருந்து சென்றதும், அவர்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஈரானில் ஒரு கும்பலால் மூவரும் கடத்தப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தலா ரூ.1.5 கோடி தர வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்களின் குடும்பத்தினர் பஞ்சாப் போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கிடைத்தது. பின்னர் ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் 3 பேர் டெஹ்ரானில் விடுவிக்கப்பட்டனர் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் காணாமல் போன 3 இந்தியர்களை போலீசார் கண்டுபிடித்து விடுவித்ததாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.