பிரான்ஸ் தேர்தல் முடிவு அறிவிப்பு; இடதுசாரிகள் தலைமையில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு; எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை
பாரிஸ்: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் 30ம் தேதியும், நேற்று முன்தினமும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இடதுசாரி கூட்டணியான நியூ பாப்புலர் முன்னணி 182 இடங்களுடன் அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உள்ளது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் நடுநிலைவாத கூட்டணியான 168 இடங்களில் வென்று 2வது இடத்தையும், தீவிர வலதுசாரி கூட்டணியான தேசிய பேரணி கூட்டணி 143 இடங்களிலும் வென்றன.
மொத்தம் 577உறுப்பினர்கள் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 289 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. முதல்கட்ட தேர்தலில் முதல் இடம் பிடித்த தீவிர வலதுசாரிகள் இம்முறை 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இடதுசாரிகளுடன் அதிபர் மேக்ரான் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை பெறத் தவறியதைத் தொடர்ந்து பிரதமர் கேப்ரியல் அட்டல் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக முதலில் தகவல்கள் வந்த நிலையில், அதிபர் மேக்ரான் அதனை மறுத்துள்ளார். அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வரை பிரதமராக பொறுப்பு வகிக்க கேட்டுக் கொண்டுள்ளதாக அதிபர் மேக்ரான் கூறி உள்ளார். இடது சாரிகள் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாத வலது சாரி கட்சியின் ஆதரவாளர்கள் பாரீசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். இன்னும் 3 வாரத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் பிரான்சில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.