அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கைவிலங்கு போட்டு சிறையில் அடைத்த ஏஐ வீடியோ: டிரம்ப் வெளியிட்ட பதிவால் பரபரப்பு
வாஷிங்டன், ஜூலை 22: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கடந்த 2016 தேர்தலில் டிரம்பின் வெற்றியைத் தடுக்க ஒபாமா நிர்வாகத்தினர், ‘டிரம்ப்-ரஷ்யா கூட்டு சதி’ என்ற பொய்யான கதையை திட்டமிட்டு உருவாக்கியதாக தேசிய புலனாய்வுத் துறை இயக்குனர் துளசி கப்பார்ட் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ஒபாமா நிர்வாகத்தினர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில், தனது நடவடிக்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்வது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வீடியோவை அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில், ஓவல் அலுவலகத்தில் ஒபாமாவுக்கு அதிகாரிகள் கைவிலங்கிடுவதும், அப்போது டிரம்ப் அருகில் அமர்ந்து புன்னகைப்பதும் போன்ற காட்சிகள் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. ஒபாமா சிறைக்கைதிகளுக்கான ஆரஞ்சு நிற உடையில் நிற்பதுடன் அந்த போலி வீடியோ முடிகிறது.