லண்டன்: இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் அரிய ஓவியம் ஒன்று ரூ.1.7 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. 1931ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 2வது வட்டமேசை மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி லண்டன் சென்றார். அப்போது லண்டனின் புகழ் பெற்ற ஓவிய கலைஞர் கிளேர் லைட்டன் மகாத்மா காந்தியை சந்தித்தார். அப்போது ஓவியரின் விருப்பத்தை ஏற்று, தன் ஓவியத்தை வரைவதற்காக மகாத்மா காந்தி போஸ் கொடுத்தார்.
அப்போது வரையப்பட்ட காந்தியின் அரிய ஓவியம் 1974ம் ஆண்டு பொதுக்காட்சிக்கு வைக்கப்பட்டது. பின்னர் ஓவியர் கிளேர் லைட்டன் இறக்கும்வரை அவரிடம் அந்த ஓவியம் இருந்தது. இந்நிலையில் காந்தியின் அரிய ஓவியம் நேற்று ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸ் நகரில் இணையவழியே நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியின் ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையானது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு ஓவியம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.