ஐக்கிய நாடுகள் சபை: ஆப்கானிஸ்தான் குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீது ஐநா பொதுச் சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது. கடந்த 2021ல் தலிபான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை என்ற தலைப்பில் ஐநா பொதுச் சபையில் ஜெர்மனி வரைவு தீர்மானம் கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி அடைவதில் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஐநா பொதுச் சபையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. மற்றபடி, மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளின் 116 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறுகையில், ‘‘மோதலுக்கு பிறகு சூழ்நிலையை சீர்செய்வதற்கான எந்தவொரு கொள்கையும் நேர்மறையான நடத்தையை ஊக்குவிப்பதோடு, தீங்கு விளைவிக்கும் செயல்களை தடுப்பதையும் கலவையாக கொண்டிருக்க வேண்டும். இதில், வழக்கமான அணுகுமுறை மூலம் ஆப்கான் மக்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகளை சர்வதேச சமூகத்தால் தர முடியாது. அல்கொய்தா, ஐஎஸ்ஐஎல், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அவற்றின் துணை அமைப்புகளின் செயல்பாடுகளை தடுக்கவும், அந்த அமைப்புகளின் பிராந்திய ஆதரவாளர்கள், தீவிரவாதத்திற்காக ஆப்கானிஸ்தான் மண்ணை இனியும் சுரண்ட முடியாது என்பதை உறுதி செய்வதில் சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். இதன் மூலம் மறைமுகமாக பாகிஸ்தானை சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.