புதுடெல்லி: மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் பரிசுகளை அள்ளி வழங்கி திக்குமுக்காட வைத்துள்ளன. சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்காவை அபாரமாக வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதையடுத்து இந்திய அணிக்கு ரூ. 39.7 கோடியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அளித்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ரூ.51 கோடி பரிசு வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், வெற்றி வீராங்கனைகளுக்கு அவர்கள் சார்ந்த மாநில அரசுகள் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி திக்குமுக்காடச் செய்துள்ளன. மகாராஷ்டிரா மாநில அரசு, இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், ராதா யாதவ் ஆகியோருக்கு தலா ரூ. 2.25 கோடி ரூபாய் பரிசு வழங்கி, ‘மகாராஷ்டிராவின் பெருமை’ என வாழ்த்தி கவுரவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட்டிற்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கியுள்ளார். மேலும், அவரது பெற்றோர், பயிற்சியாளர் ஆகியோருக்கும் மாநில அரசு பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளது.
ஆந்திராவை சேர்ந்த வீராங்கனை ஸ்ரீசரணிக்கு, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரசு சார்பில் ரூ. 2.5 கோடி பரிசு, குரூப் 1 அந்தஸ்தில் அரசு வேலை, கடப்பாவில் 9,000 சதுர அடி வீட்டு மனை வழங்கி அசத்தியுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அவரது சொந்த ஊரில் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் அமைப்புகள் மற்றும் தலைவர்களால் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்பட்டார். உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஆல்ரவுண்டர் ஸ்நேஹ் ராணாவிற்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கி உள்ளது.

