கவுகாத்தி: உலக ஜூனியர் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை தன்வி சர்மா, தாய்லாந்தின் அன்யாபட் பிசிட்பிரீசஸக்கிடம் தோல்வியை தழுவினார். கவுகாத்தியில் ஜூனியர் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சீனாவின் லியு சி யாவை வீழ்த்திய இந்திய வீராங்கனை தன்வி சர்மா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை அன்யாபட் பிச்சிட்பிரீசஸக் உடன் தன்வி சர்மா மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பிசிட்பிரீசஸக், 15-7, 15-12 என்ற நேர் செட் கணக்கில் தன்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன், கடந்த 2023ல் நடந்த ஆசிய அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோர் மோதிய ஜூனியர் போட்டியில் பிசிட்பிரீசஸக்கை தன்யா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் தோற்ற தன்யாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம், உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா சார்பில் வெள்ளி வென்ற 5வது நபராக தன்யா சர்மா உருவெடுத்துள்ளார். இதற்கு முன், இந்தியாவின் அபர்ணா பொபட் (1996), சாய்னா நெஹ்வால் (2006), சிரில் வர்மா (2015), சங்கர் முத்துசாமி (2022) வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களில், சாய்னா நெஹ்வால், 2008ல் நடந்த போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.