ரியாத்: போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40). தன் வாழ்நாளில் 950க்கும் அதிகமான கோல்களை அடித்து சாதனை படைத்தவர். தற்போது, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ஆடி வருகிறார். இந்நிலையில், கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெறப் போவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
அது தொடர்பாக, நேற்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘வரும் 2026ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்போது எனக்கு 41 வயதாகி இருக்கும். அதுதான் எனது கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும். அதற்கு பின், அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக ஆட மாட்டேன். இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நான் ஆடுவேன்’ என்றார். வரும் 2026ல் ரொனால்டோ ஆடுவது, 6வது உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
