உலகக்கோப்பை நாயகிக்கு சென்னையில் பாராட்டு விழா: தோனியா கோஹ்லியா மந்தனவா? மாணவர்கள் கேள்விக்கு கவுர் சொன்ன ரகசியம்
சென்னை: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பையை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வீராங்கனைகளுக்கு நாடு முழுவது இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு பிசிசிஐ பரிசுத்தொகை வழங்கியது மட்டுமில்லாமல் மாநில அரசுகள் தனித்தனியாக பரிசுகளை வழங்கி உள்ளது.
இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த கவுருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இந்திய அணியினர் கோப்பையை வென்று கொண்டாடியதை போல், பள்ளி மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து வந்து ஹர்மன்பிரீத் கவுரிடம் கோப்பையை பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, கவுரிடம் மாணவர் ஒருவர் தோனி, விராட் கோஹ்லி இருவரில் யார் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி என கவுர் பதிலளித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது. அதனை தொடர்ந்து தோனி,ஸ்மிருதி மந்தனா இவர்களில் யார் என இன்னொருவர் கேள்வி எழுப்ப, மந்தனா என கவுர் பதிலளித்தார். இதனால் அதிர்ந்த அரங்கம் அமைதியானது. அதனை தொடர்ந்து மந்தனாவா மிதாலி ராஜா என கேள்வி எழுப்ப மீண்டும் ஸ்மிருதி என பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
