குவாங்ஜு: கொரியாவில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, மூவர் அடங்கிய இந்திய கூட்டு அணி, முதல் முறையாக தங்கம் வென்று அபார சாதனை படைத்துள்ளது. கொரியாவின் குவாங்ஜு நகரில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அணிகள் இடையிலான வில் வித்தை போட்டியின் இறுதியில் இந்தியாவை சேர்ந்த ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் ஃபுகே ஆகியோர் அடங்கிய கூட்டு அணி, 235-233 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
கலப்பு அணி பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா அடங்கிய அணி, 155-157 என்ற புள்ளிக் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. அதனால், இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய ஆடவர் அணியில் இடம்பெற்றுள்ளோரில் குறிப்பாக, ரிஷப் யாதவ் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி வருகிறார். உலக கோப்பை அரங்குகளில் இரு தங்கம், உலக வில்வித்தை போட்டிகளில் ஒரு வெண்கலம் உட்பட சமீப காலத்தில் அவர் 5 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.