இலுப்பூர் : உலக மரபு வார விழாவையொட்டி இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியில் பழங்காலச் சிற்பங்கள் கல்வெட்டுகளை சூழ்ந்திருந்த வேலிக்கருவேல மரங்களை கல்லூரி மாணவிகள் அகற்றி கட்டுமானங்கள் மீட்டனர்.உலக மரபு வார விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியில் ஒரு சிறப்பு வரலாற்றுத் தகவல் பகிர்வு நிகழ்வு மற்றும் கருவேல முட்புதர்களை அகற்றும் நிகழ்வு இரு தினங்களாக நடைபெற்றது.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை ஆகியவை இணைந்து இந்த அரிய கள ஆய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன. அழியும் நிலையில் உள்ள கோவில் எச்சங்கள் ஆய்வு, எருக்குமணிப்பட்டியில் பழங்காலத்தில் கோவில் இருந்த இடத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட பழமையான சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்த நிகழ்வு அமைந்தது.
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவிகள் ஸ்ரீரீநிதி, சுபாஷினி, லாவண்யா, ஹஸ்லீன் சிபானா, நந்தினி, பிரியா, ரேணுகா தேவி, மோகனா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்த செய்திகள் மற்றும் சிற்பங்களின் கலை நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் இராசேந்திரன் எருக்குமணிப்பட்டியின் தொன்மைச் சிறப்பையும், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் காலம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று தகவல்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் காயத்ரி தேவி பேசுகையில், இதுபோன்ற களப்பணிகள் மாணவர்களின் பாட அறிவை மேம்படுத்துவதோடு, நமது பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணரச் செய்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வு, புதுக்கோட்டை பகுதியின் பழமையான மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உள்ளூர் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் எடுத்துச் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.


