உலகக் கோப்பையை வென்ற கையோடு இசையமைப்பாளரை கரம்பிடிக்கும் வீராங்கனை: மகாராஷ்டிராவில் 20ம் தேதி திருமணம்
சங்க்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது நீண்ட நாள் காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலும் கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். தங்களது காதலை கடந்த 2024ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சமீபத்தில், ‘ஸ்மிருதி விரைவில் ‘இந்தூரின் மருமகள்’ ஆகப் போகிறார்’ என்று பலாஷ் முச்சால் சூசகமாகத் தெரிவித்திருந்தது, அவர்களது திருமணம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. இந்நிலையில், இந்திய அணி சமீபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பலாஷ் தனது காதலியுடன் உலகக் கோப்பையை ஏந்தியபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், ஸ்மிருதியின் பெயர் மற்றும் ஜெர்சி எண்ணைக் குறிக்கும் ‘SM18’ என்ற டாட்டூவை அவர் கையில் பச்சை குத்தியிருந்ததும் ரசிகர்களிடையே வைரலானது.
இந்தச் சூழ்நிலையில், ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சாலின் திருமணம் வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய அவரது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் சங்க்லியில் இந்தத் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழா, இருவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் எளிய விழாவாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பையை வென்ற சில நாட்களிலேயே ஸ்மிருதியின் திருமணச் செய்தி வெளியாகியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
