பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை விஏஓ காலிப்பணியிடத்தை நேரடியாக நிரப்ப தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை விஏஓ காலி பணியிடத்தை நேரடியாக நிரப்ப ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர்(பொ) அருள்ராஜ் மற்றும் விஏஓ அகமது பயாஸ் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கிராம நிர்வாக அலுவலர்களுக்கான 218 காலியிடங்களில் இடமாறுதலுக்காக ஒற்றை வழி இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்தார். பணியிட அனுபவ காலத்தை கணக்கிடாமல் இடமாறுதல் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட் கிளையில் நிலுவையில் உள்ளது. 215 காலியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்ப முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வானவர்கள் தங்களின் கல்வி சான்றிதழை பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்ான பணியிட மாறுதல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 218 விஏஓ பணியிடங்களுக்கு இடமாறுதல் வழங்காமல், டிஎன்பிஎஸ்சி நேரடி நியமனம் மூலம் நிரப்பக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். முறையாக இடமாறுதல் வழங்கிய பிறகே, நேரடி நியமனத்தை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இடைக்கால தடை விதித்தார். மேலும் மனுவிற்கு வருவாய் நிர்வாகத் துறை செயலர் மற்றும் டிஎன்பிஎஸ்சி செயலர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
