*சகோதரிகள் அசத்தல்
திருமலை : ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூர் மண்டலம், வேப்புமாக்குலப்பள்ளியை சேர்ந்தவர்கள் முனிவெங்கடப்பா- கவுரம்மா தம்பதி. இவர்களுக்கு வீணா, குமாரி, வாணி, வனஜாக்சி என 4 மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 2007ம் ஆண்டு முனிவெங்கடப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இருப்பினும் தனது 4 மகள்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க கல்வியால் மட்டுமே மாற்றம் கொண்டு வர முடியும் என முடிவு செய்த கவுரம்மா கூலி வேலைக்கு சென்று தனது 4 மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார்.
விடா முயற்சியுடன் படித்த 4 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர். இதில் மூத்த மகள் வீணா கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநில காவல் துறையில் கான்ஸ்டபிளாக வேலை பெற்றார். வாணி கடந்த 2016ம் ஆண்டு 2ம் நிலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
கடந்த மாதத்திற்கு முன்பு 3வது மகள் வனஜாக்சி போலீஸ் கான்ஸ்டபிளாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்ந நிலையில் சமீபத்தில் சிரிஷா டி.எஸ்.சி. தேர்வு எழுதி 2ம் நிலை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
இதனால் கல்வியின் மூலம் வறுமையைப் போக்க முடியும் என்பதை கவுரம்மா குடும்பத்தினர் நிரூபித்துள்ளனர். தாயின் பெயரையும், குடும்ப மரியாதையையும் காப்பாற்றிய நான்கு மகள்கள் உண்மையிலேயே சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் என கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.